மனிதனை மற்ற உயிர்களிலிருந்து வேறுபடுத்தி, சீரிய வாழ்வு அமைத்து கொள்ள வழி வகுத்தது அறிவியலாகும். அறிவை இயக்கும் இயலாக திகழும் அறிவியல் மனித வாழ்வில் பல அற்புதங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இன்று நாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து உலகத்தை சுலபமாக அறிந்து கொள்ள அறிவியல் துணை புரிகிறது. நம் வாழ்வின் அன்றாட தேவைகளுக்கு கூட அறிவியல் பேருதவி புரிகிறது. மனிதனின் பெருமையை இப்புவியிலும், புவிக்கு வெளியிலும் காலந்தொட்டு பறைசாற்றும் ஆதார சின்னமாக அறிவியல் விளங்குகிறது.

அறிவியலின் வளர்ச்சிக்கு உலகில் உள்ள அனைத்து குடியினரும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளார்கள். அதில் குறிப்பாக இந்தியாவின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவில் அடங்கும். இந்தியா பழம்பெரும் நாடாக விளங்கினாலும் அதன் அறிவியல் பாரம்பரியமும், பெருமையும் இன்றும் பல அறிஞர்களை வியக்கவைக்கிறது. ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவின் அறிவியல் பெருமையும், பாரம்பரியமும் இளைய சமுதாயத்திற்கு விளங்காமல் இருப்பது வருந்தத்தக்க செய்தியாகும். வெளிநாட்டிற்கு சென்றால் தான் பெருமை என்றும் அங்கு சென்றால் தான் சாதிக்க முடியும் என்றும் நம்பும் இன்றைய பெற்றோர்களும், குழந்தைகளும் நம் பாரத பூமியின் பிரமிப்பான மகத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் இந்த நினைப்பிற்கு அவர்கள் மட்டுமா காரணம்? பண்டைய இந்திய அறிவியல் மேதைகளும் ஓரளவிற்கு காரணமாக விளங்குகிறார்கள்.

அந்நாளில் வாழ்ந்த இந்திய அறிவியல் அறிஞர்கள் தங்கள் கண்டுப்பிடிப்புகளை வெகுவாக மற்றவர்களிடம் கூறாமல் தங்களது ஆத்ம சீடர்களிடமே அறிவித்தனர். இதனால் நம் அநேக கண்டுப்பிடிப்புகள் ஒரு குறிப்பிட்ட நபர்கள் தவிர மற்றவர்களுக்கு தெரியாமலே போய்விட்டது. சில அறிஞர்கள் தாங்கள் கண்டறிந்த செய்திகளை ஒரு சிலரே புரிந்து கொள்ள தகுதி பெற்றவர்கள் என எண்ணி அதனை மறைமுகமாக அங்குமிங்கும் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் கூறவரும் செய்திகளை முழுவதும் புரிந்துகொள்ள எதுவாக அமையவில்லை. பல நூறாண்டுகள் பிறகு இந்த கண்டுப்பிடிப்புகள் முழுவதுமாக அறியப்பட்டாலும் அதற்கு சில காலம் முன்பு ஐரோப்பியர்கள் கண்டறிந்து தெரிவித்ததனால் இந்தியாவின் முழு அறிவியல் ஆற்றல் அறியாமலேயே போய்விட்டது. அன்றே இந்தியர்கள் தங்கள் கண்டுப்பிடிப்புகளை உடனுக்குடனே அனைவருக்கும் அறிவித்து தகுந்த முறையில் பதிவு செய்திருந்தால் இந்தியாவின் அறிவியல் கண்டுப்பிடிப்புகளின் மகிமை இன்று உலகமே வியக்கும் அளவிற்கு அமைந்திருக்கும்.

மேற்கூறியது போல இந்தியாவின் அறிவியல் மகிமை தெரிந்தோ தெரியாமலோ காலத்தால் மறைக்கப்பட்டாலும் இன்று ஆய்வு புரியும் அறிஞர்கள் இந்தியாவின் பங்களிப்பை நன்கு புரிந்து உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது சிறிது ஆறுதலான செய்தியாக விளங்கிறது. இந்தியாவின் அறிவியல் பெருமைகள் எண்ணற்றவை. அதில் ஒரு சில அமுத துளிகளை இந்திய மக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த புத்தகத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த புத்தகத்தை படித்த பின் இந்தியா உண்மையிலேயே மிகச் சிறந்த அறிவியல் பாரம்பரியம் மிக்க நாடு என்றும் நாம் இந்தியாவில் இருந்தே பல சாதனைகளை புரிய முடியும் என்று நம்பி இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு பாடுபட முற்பட்டு செயல்படுவதையே இந்த புத்தகத்தின் வெற்றியாக கருதுகிறோம்.

இப்புத்தகத்தில் வழங்கியிருக்கும் கருத்துக்கள் முடிந்த வரையில் சரிபார்த்தே வழங்கியிருக்கிறோம். ஏதேனும் தவறு தென்பட்டால் அதனை எங்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவரை பை கணித மன்றம் ஆறு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இதில் மூன்று ஆங்கில புத்தகங்களும், மூன்று தமிழ் புத்தகங்களும் அடங்கும். இப்புத்தகம் பை கணித மன்றத்தின் ஏழாம் வெளியீடாகும். மற்ற புத்தகங்களை போல இப்புத்தகத்தையும் சான்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் படித்து பயன் பெறுவார்கள் என நம்புகிறோம்.

இப்புத்தகத்தை இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்காக அன்றும், இன்றும், வரும் காலங்களிலும் இந்தியாவிலிருந்து சாதித்த பெருமக்களுக்கு, காணிக்கையாக்குகிறோம். மேலும் இப்புத்தகத்தை படித்து முடித்த பின் இந்தியா உண்மையில் அறிவியல் துறையில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்றும் நம் அறிவியல் பாரம்பரியம் மிக பழமையானதாக இருப்பினும் அது பெருமையானது, பெரும் புகழ் வாய்ந்தது, இன்றளவும் சரியாக விளங்கும் ஆழமான கருத்துடையது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.

நன்றி!

பை கணித மன்றம்

சென்னை

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book