இரா. சிவராமனைப் பற்றி . . .

கணிதப் பேராசிரியராக விளங்கும் இவர் கணிதத்தை அனைவரும் அச்சமில்லாமல் விரும்பி படிக்க வேண்டும் என்பதற்காகவே π கணித மன்றம் என்ற அறக்கட்டளையை தன் முன்னாள் மாணவர்களின் துணையோடு தொடங்கி, அதன் நிறுவனராக விளங்கி வருகிறார். கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை இந்தியா முழுமையிலும் வழங்கியுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் பல பயிலரகங்கள், கண்காட்சிகளை நடத்தி, பங்கேற்று திறம்பட செயல்பட்டுள்ளார். இவர் எழுத்தாளராகவும் விளங்குகிறார்.

இதுவரை எட்டு புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் π கணித மன்றம் சார்பில் எழுதியுள்ளார். இவர் எழுதிய “எண்களின் எண்ணங்கள்” என்ற புத்தகம் தமிழக அரசின் சிறந்த அறிவியல் நூல் விருதை வென்றது. இப்புத்தகம் மொத்தத்தில் மூன்று விருதுகளை பெற்றுள்ளது. கணித மேதை இராமானுஜனின் தொண்டராக விளங்கும் இவர் “எண்களின் அன்பர்” – இராமானுஜன் வாழ்வும், கணிதமும் சார்ந்த மிக விரிவான தமிழ் புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தமும் தமிழக அரசின் சிறந்த அறிவியல் நூல் விருதை வென்றுள்ளது. இது தவிர, திருப்பூர் தமிழ் சங்கம், பாரதி தமிழ்ச் சங்கங்களின்  சிறந்த நூல் விருதைப் பெற்றுள்ளது. மொத்தத்தில் இப்புத்தகம் நான்கு விருதுகளை வென்றுள்ளது. அண்மையில் திரையிடப்பட்ட ராமானுஜன் திரைப்படத்திற்கு இவர் முக்கிய ஆவணங்கள், புத்தகங்களை வழங்கி அப்படக் குழுவிற்கு உதவியுள்ளார். இதன் காரணமாக திரைப்படத்தின் தொடக்கத்தில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அறிவியல் பெருமையை பறைசாற்றும் வகையில் இவர் இயற்றிய “இணையில்லா இந்திய அறிவியல்” என்ற தமிழ்ப் புத்தகம் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகச் சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்புத்தகத்திற்கு உரத்த சிந்தனை அமைப்பின் விருது கிடைத்துள்ளது.

‘தி இந்து’, ‘தி நியூ  இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ போன்ற புகழ்பெற்ற நாளிதழ்களில் கடந்த ஐந்தாண்டுகளாக கணிதப் புதிர்களை π கணித மன்றம் சார்பில் வழங்கி வருகிறார்.   சென்னை ரிப்போர்ட், மஞ்சரி, சுட்டி விகடன் போன்ற இதழ்களில் கணிதத்தை பிரபலப்படுத்த பல கட்டுரைகளை எழுதி வருகிறார். அறிவியல் சஞ்சிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அமெரிக்க கணிதச் சங்கம், இராமானுஜன் கணிதச் சங்கம், இந்திய கணித ஆசிரியர்கள் சங்கம் போன்ற கணிதம் சார்ந்த பல்வேறு சங்கங்களில் ஆயுள் உறுப்பினராக விளங்குகிறார். அறிவியல் அமைப்புகளுக்கு கணிதம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார். கணிதத்தின் மேன்மையையும், பயன்பாட்டினையும் அனைவரும் உணர வேண்டும் என்பதே இவரது வாழ்வின் முக்கிய இலட்சியமாக விளங்குகிறது.

_____________________________________________________________________________________

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book