அன்றைய இந்தியர்கள் வானில் பறந்து செல்லும் ஊர்திகளைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். அவ்வூர்திகளை “விமானம்” என்று அழைத்தனர். இன்றும் இத்தொடர் புழக்கத்தில் உள்ளதை நாம் காண்கிறோம். அக்காலத்தில் விமானங்களை இறைவனின் ரதமாக கருதினார்கள். இந்தியர்கள் விமானங்களை இரு வகையாக பிரித்தனர். முதல் வகையில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட விமானங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் பறவையின் இறகுகள் போல இறக்கையை கொண்டு பறக்கும் தன்மை பெற்றவை. இதில் மனிதர்கள் பயணம் செய்யலாம். இரண்டாம் வகை விமானங்கள் மனிதனால் கட்டப்படாமல் வானில் தானாகவே பறந்து செல்லும் இயல்பு பெற்றவை. இந்த வகை விமானங்கள் அதிவேகத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் தன்மை பெற்றவையாக கருதப்படுகிறது. இன்று சில அறிஞர்கள் இவ்வகை விமானங்கள் வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து போகிற விண்கலங்கள் என்று கூறுகிறார்கள். எது எவ்வாறாயினும் இந்த பறக்கும் பொருட்களின் அறிவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் அறிந்திருந்ததை உணரும் பொழுது வியப்பாகவே உள்ளது.

முதல் வகை விமானங்கள் இன்றைய நவீன விமானங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றன. இரண்டாம் வகை விமானங்கள் இன்றைய ஏவுகனைகளுக்கும் செயற்கைக் கோள்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றன. மேலும் இரண்டாம் வகை விமானங்களை பற்றிய செய்திகளை ரிக் வேத குறிப்புகள், ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் காணமுடிகிறது. நாம் இன்று பயன்படுத்தும் விமான தொழில்நுட்ப சிந்தனைகளை அன்றே வாழ்ந்த இந்தியர்கள் அறிந்திருந்ததை கண்டால் காணலாம்.

இந்தியர்கள் அந்நாளில் விமானங்களை பற்றி அமைத்திருந்த ஆவணங்களில் எஞ்சியிருந்த குறிப்புகளை அறிஞர்கள் பிற்காலத்தில் ஆய்வு புரிந்ததில் இந்த இரு வகை விமானங்கள் வானில் பறப்பதற்கு, அவ்விமானங்கள் புவிஈர்ப்பு விசையை எதிர்த்து செல்லும் தன்மையை பெற்றுள்ள திறனே முக்கிய காரணமாகும் என்று கூறுகின்றனர். ஆனால் புவிஈர்ப்பை எதிர்த்து இயங்கும் விசைகளை பற்றிய அறிவியல் சிந்தனையை இருபதாம் நூற்றாண்டிலேயே உலக விக்ஞானிகள் உணர்ந்தனர்.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய மகரிஷி பாரத்வாஜர் இந்திய விமான தொழில்நுட்ப சிந்தனையில் முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் ஆங்கிரசர் என்ற மாமுனிவரின் வழிவந்த ஞானியாக கருதப்படுகிறார். இந்து கலாசாரத்தில் விளங்கும் ஏழு ஞானிகளில் (சப்த ரிஷிகள்) இவர் ஒருவராக விளங்குகிறார். அத்ரி, வசிஷ்டர், அகத்தியர், பாரத்வாஜர், கௌதமர், ஜமதக்னி, காஷ்யப்பர் என்ற ஞானிகளே சப்த ரிஷிகள் என்ற பெருமை பெற்றவர்கள். இன்றும் இந்து குடும்பங்களில் நடைப்பெறும் சுப காரியங்களுக்கு இந்த ஏழு ரிஷிகள் வழிவந்த மக்கள் அந்தந்த ரிஷியை முதலில் வணங்கிவிட்டு தான் தங்கள் நிகழ்வை தொடர வேண்டும். அவ்வாறு என்றென்றும் போற்றப்படும் சப்த ரிஷிகளில் ஒருவராக விளங்கிய மகரிஷி பாரத்வாஜர் இந்திய விமானங்களை பற்றிய செய்திகளை “யந்திர சர்வாச்வா” (விமானங்களின் சாஸ்திரம்) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். பாரத்வாஜர் மகாபாரதத்தில் வரும் துரோனாசாரியரின் தந்தையாகவும், அச்வத்தாமனின் தாத்தாவாகவும் விளங்குகிறார். மேலும் இந்திய கண்டத்தின் முதல் மன்னனான பாரத் என்பவரின் சமக்காலத்தவராக கருதப்படுகிறார். இன்றும் இவரது ஆசிரமத்தை இந்தியாவில் அமைந்த அலஹாபாத்தில் காணலாம். மகரிஷி பாரத்வாஜரின் படத்தை காணலாம்.

பாரத்வாஜர் வழங்கிய “விமானங்களின் சாஸ்திரம்” என்ற நூலே உலகில் முதன் முதலில் எழுது வடிவில் பதிக்கப்பட்ட வான்பயண நூலாக விளங்குகிறது. இந்த வான்பயண நூலை முதன் முதலில் பாரத்வாஜர் வழங்கியதால் அவரை இன்று “வான்பயண அறிவியலின் தந்தை” (“Father of Aviation Science”) என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

“விமானங்களின் சாஸ்திரம்” என்ற நூலில் பாரத்வாஜர் மூன்று வகையாக பறக்கும் விமானங்களைப் பற்றி பாரத்வாஜர் குறிப்பிட்டுள்ளார். முதல் வகை விமானங்கள் பூமியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் திறன் பெற்று விளங்கும். (இன்றைய பயணிகள் விமானம் போல) இரண்டாம் வகை விமானங்கள் ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளிற்கு செல்லும் திறன் பெற்றவை (இன்றைய செயற்கைக் கோள்கள் போல) மூன்றாம் வகை விமானங்கள் ஒரு பிரபஞ்சத்திலிருந்து மற்ற பிரபஞ்சங்களுக்கு செல்லும் திறன் பெற்றவை (வேற்று கிரக வாசிகளின் விமானம் போல) என மூன்று வகை விமானங்களின் செயல்திறனையும், அதன் கட்டமைப்பையும் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் அவரது நூலில் ஒரு விமானத்தை சூரிய ஒளியையும் காற்றையும் கொண்டு அப்படியே மறைந்து போக வைப்பது, மின்னாற்றல் பெற்ற விசையைக் கொண்டு மறைந்திருக்கும் விமானத்தை காணும்படி செய்ய வைப்பது, ஒரு விமானத்தில் பேசும் ஒலியை மற்றொரு விமானத்தில் செல்லும் நபர்கள் கேட்குமாறு அமைப்பது, ஒரு விமானத்தினுள் என்ன நடக்கிறது என காணும் திறனை விளக்குவது போன்ற நான்கு மிக முக்கிய வான்பயண ரகசியங்களை வழங்கினார்.

இன்றும் இந்த ரகசிய முறையில் தான் ஒரு விமானம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பூமியின் தரைப்பகுதியில் அமைந்த கட்டுப்பாட்டு அறையின் அறிவுரைப்படி பாதுகாப்பாக செல்ல முடியும். இந்த யுக்திகளை கிட்டத்தட்ட ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக பாரத்வாஜர் வழங்கியிருப்பதை அறியும் பொழுது அவரை “வான்பயண அறிவியலின் தந்தை” என்று அனைவரும் சந்தேகமில்லாமல் ஒப்புகொள்வோம். மேலும் பாரத்வாஜரின் இந்த விளக்கங்கள் இன்றுள்ள வான்பயண அறிஞர்களைக் கூட பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் இருபெரும் காப்பியங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களில் நிறைய விமான செய்திகள் காணக்கிடைக்கின்றன. உதாரணமாக சீதாதேவியை ராவணன் கொண்டு செல்ல புஷ்பக விமானத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்செய்திகள் அன்றைய இந்தியர்கள் விமானங்கள் பற்றிய குறிப்புகளை நூல் வடிவில் மட்டும் பதிவு செய்யாமல் அதன் ஆற்றலை புரிந்து அவர்களே விமானங்களை அமைத்து வாழ்ந்தனர் என உறுதிசெய்கிறது. ஆனால் நவீன உலகில் 17/12/1903 ல் தான் ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை இயக்கியதாக வரலாறு தெரிவிக்கிறது. எனவே இந்தியர்கள் வான்பயண அறிவியலிலும் மற்ற குடியினருக்கு முன்னோடிகளாக விளங்கினர் என்பது தெளிவாகிறது. பண்டைய இந்தியர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிற சில விமானங்களை படத்தில் காணலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book