வேத குறிப்புகளில் இறுதியான குறிப்பான அதர்வண வேதத்தில் பண்டைய இந்தியர்கள் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆயுர்வேத மருத்துவ முறைகளை கையாண்டார்கள் என்ற செய்தி உள்ளது. இந்த கருத்தை மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி கண்டெடுப்புகள் உறுதி செய்கின்றன. இக்குறிப்பே உலகில் முதன்முதலில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் மருத்துவத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்திய செய்தியாக விளங்குகிறது.

பண்டைய இந்திய மருத்துவத்தில் மிக முக்கியமான மூன்று ஆசான்கள் இருந்தனர். அவர்கள் ஆத்ரேயா (உடல் உறுப்புகள் சார்ந்த மருத்துவம்), தன்வந்தரி (அறுவை சிகிச்சை), காஷ்யப்பா (மகளிர் மற்றும் குழந்தை மருத்துவம்) ஆவர். இந்த மூன்று ஆசான்கள் வழி வந்த ஆத்ம சீடர்களான மூன்று நபர்கள் இந்திய மருத்துவத்தை பேணிக் காத்தனர். அவர்கள் சரக்கா (ஆத்ரேயா வழி வந்த அறிஞர். காலம் – கி. மு. முதல் நூற்றாண்டு), சுஷ்ருதா (தன்வந்தரி வழி வந்த அறிஞர். காலம் – கி. மு. ஆறாம் நூற்றாண்டு), வாக்பட்டா (காஷ்யப்பா வழி வந்த அறிஞர் . காலம் – கி. பி. ஆறாம் நூற்றாண்டு) ஆவர். இந்த மூன்று இந்திய மருத்துவ மேதைகளை (மருத்துவ முன்னோடிகளை) படத்தில் காணலாம்.

இடமிருந்து வலமாக: சரக்கா, சுஷ்ருதா, வாக்பட்டா

அன்றைய இந்தியாவில் “ஆயுர்வேதம்” என்ற பெயரில் மருத்துவம் துவங்கப்பட்டது. “ஆயுர்வேதம்” என்ற சொல்லிற்கு “நீண்ட ஆயுளை பெறக்கூடிய அறிவு சிந்தனை” என அர்த்தம் அமையும். எனவே இந்தியர்கள் அறிமுகப்படுத்திய “ஆயுர்வேதம்” என்ற அறிவு சிந்தனை, மக்கள் நலனை பேணிக்காத்து அவர்கள் வாழ்வை அதிக காலம் நீடிக்க வைக்க பெரும்துனையாய் விளங்கிய மருத்துவ முறையாக கருதப்பட்டது. ஆயுர்வேதத்தின் அடிப்படை கொள்கைகளையும், அதனை பயன்படுத்தும் விதத்தையும் தெளிவாக விளக்கியவர்கள் மேற்கண்ட மூன்று மேதைகளே! குறிப்பாக சரக்கா, சுஷ்ருதா ஆகியோர் ஏற்படுத்திய நூல்களே ஆயுர்வேதத்தின் மூல நூல்களாக கருதப்படுகின்றன. இந்த மூன்று மேதைகளை பற்றியும் அவர்களின் ஆற்றலையும் தனித்தனியே அறிந்து கொள்வது தான் சிறப்பாகும்.

சரக்கா

சரக்கா வழங்கிய “சரக்கா சம்ஹிதா” என்ற படைப்பே ஆயுர்வேத கலைக்களஞ்சியமாக கருதப்படுகிறது. இதை சரக்கா ஏற்படுத்தியால் அவரை “மருத்துவத்தின் தந்தை” என அறிஞர்கள் அழைக்கிறார்கள். சரக்கா ஏற்படுத்திய மூல நூல் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிலோ அல்லது கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலோ தோன்றியதாக தெரிகிறது. ஆனால் அம்மூல நூல் நமக்கு கிடைக்கவில்லை. இன்று நாம் அறியும் “சரக்கா சம்ஹிதா” என்ற ஆயுர்வேத கலைக்களஞ்சியத்தை திரிதபாலா என்ற அறிஞர் பிற்காலத்தில் (கி. மு. முதல் நூற்றாண்டில்) ஏற்படுத்தியதாக தெரிகிறது.

திரிதபாலா மூலம் நமக்கு கிடைத்த “சரக்கா சம்ஹிதா” என்ற படைப்பில் எட்டு பிரிவுகளில் 120 அத்யாயங்கள் காணப்படுகின்றன. இந்த எட்டு பிரிவுகளில் ஆரோக்கியமான வாழ்வின் வழிமுறைகள், அதற்கான உணவு கட்டுப்பாடுகள், மருத்துவரின் கடமைகள், நோய்களை கணிக்கும் முறைகள், நோய் தோன்றுவதற்கான அறிகுறிகள், அதனை குணப்படுத்தும் முறைகள், கருவியல், உடற் உட்கூற்று அமைப்பியல், சிறப்பு சிகிச்சை முறைகள், மருந்து தயாரிப்பும் அதனை பயன்படுத்தும் முறையை கொண்ட விளக்கங்கள் போன்ற மருத்துவம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மருத்துவ அறிவுப் புதையலாக விளங்கியது. இதனாலேயே சரக்காவை “மருத்துவத்தின் தந்தை” என கருதுகிறோம். ஆனால் ஒரு தனி நபரால் எப்படி இவ்வளவு மருத்துவ சிந்தனைகளையும் வழங்க இயலும்? என்பது இன்றும் பிரம்மிக்க வைக்கும் வினாவாகவே அமைகிறது.

நீரிழிவு நோய், காசநோய், இருதய நோய் போன்ற நோய்களுக்கும் தனது நூலில் அக்காலத்திலேயே சரக்கா சிறந்த வைத்திய குறிப்புகளை வழங்கிருந்தார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவ தன்மைகளையும், செயல்பாடுகளையும் “சரக்கா சம்ஹிதா” என்ற நூலில் விளக்கி இன்றைய “சித்த மருத்துவம்” என்ற மருத்துவ பிரிவிற்கு வித்திட்டார்.

ஒரு நோயை கண்டறிய அந்நபரின் ஒழுக்கமும், சிந்தனையும் முக்கியம் என்ற கருத்தை முன் வைத்தார். அதே போல் ஒரு மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் எவ்வாறு கண்ணியமாக, பொறுமையாக, கருணையாக, அக்கறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று விவரித்துள்ளார். அதேபோல் மருத்துவத் துறைக்கு புதிதாக சேருவோர் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளை பற்றியும் அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியையும் தெளிவாக “சரக்கா சம்ஹிதா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் கூறிய அநேக கருத்துக்களை இன்றும் நாம் கடைப்பிடிக்கிறோம். எனவே மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் மிகத் தெளிவாக எடுத்தியம்பிய சரக்காவை “மருத்துவத்தின் தந்தை” என அழைப்பதில் எந்த கருத்து வேறுப்பாடும் எவருக்கும் தோன்றாது. இன்றும் இவர் வழங்கிய மருத்துவ குறிப்புகளை மருத்துவர்கள் தங்களின் சிகிச்சைக்கு முறைக்கு வெகுவாக பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே இவரது நூலை ஆயுர்வேதத்தின் கலைக்களஞ்சியமாக அறிஞர்கள் கருதுகின்றனர். இப்படிப்பட்ட சிந்தனைகளை மருத்துவத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி சரக்கா “உலகின் முதல் மருத்துவர்” என்ற புகழுக்கு உரியவரானார்.

சுஷ்ருதா

மருத்துவத்தின் மிக முக்கிய பிரிவான அறுவை சிகிச்சை முறையில் உலகளவில் சாதித்த பெருமை சுஷ்ருதாவையே சாரும். இவர் “சுஷ்ருதா சம்ஹிதா” என்ற அற்புத மருத்துவ நூலை கி. மு. ஆறாம் நூற்றாண்டில் எழுதியதாக தெரிகிறது. ஆனால் மூல நூல் நமக்கு கிடைக்க பெறவில்லை. மூலநூலின் மறு பதிப்பாக கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் கிடைத்த நூல் மூலமே நாம் இன்று சுஷ்ருதாவின் அருமை, பெருமைகளை தெரிந்து கொண்டுள்ளோம். இவரை “ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவத்தின் தந்தை” (“Father of Plastic Surgery”) என இன்று உலக அறிஞர்கள் போற்றுகின்றனர்.

சுஷ்ருதா மகா முனிவர் விச்வாமித்ரரின் புதல்வராவார். இவர் இயற்றிய “சுஷ்ருதா சம்ஹிதா” என்ற பிரமாண்டமான நூல் 184 அத்யாயங்களை கொண்டு அமைந்திருந்தது. இதில் 1120 வகையான உடல் நலக்கேடுகளைப் பற்றிய குறிப்புகளும், 700 மருத்துவ தன்மை வாய்ந்த தாவரங்களைப் பற்றிய செய்திகளையும், 64 வகையான கனிப்பொருள்கள் மூலம் கிடைக்கும் மருந்துகளும், 57 வகையான மிருகங்களின் மூலம் கிடைக்கும் மருத்துவ உபகரணங்களின் குறிப்புகளை பற்றிய செய்திகளும் அடங்கியுள்ளன. இவர் இயற்றிய “சுஷ்ருதா சம்ஹிதா” இரு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்து பிரிவுகளை கொண்ட முதல் பாகம் “பூர்வ தந்த்ரா” என்றும் இரண்டாம் பாகம் “உத்தர தந்த்ரா” எனவும் அழைக்கப்படுகின்றன.

ஐந்து பிரிவுகளை கொண்ட முதல் பாகம் “பூர்வ தந்த்ரா” என்றும் இரண்டாம் பாகம் “உத்தர தந்த்ரா” எனவும் அழைக்கப்படுகின்றன. “பூர்வ தந்த்ரா” எனும் பாகம் ஆயுர்வேதத்தில் நான்கு கிளைகளாக பிரிந்து காணப்பட்டது. இந்த பாகம் ஐந்து புத்தகங்களாக மொத்தம் 120 அத்யாயங்களை கொண்டு அமைந்திருந்தது. மீதமுள்ள 64 அத்தியாயங்களை கொண்டு அமைந்த இரண்டாம் பாகமான “உத்தர தந்த்ரா” மேலும் நான்கு பிரிவுகளாக அமைந்திருந்தது. இரண்டாம் பாகத்தை “ஔப திரவிகா” என்றும் அழைப்பர். இந்த இரு பாகங்களில் மருத்துவக்கலை, குழந்தை மருத்துவம், முதியோர் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை-கண் போன்ற உறுப்புகளின் மருத்துவம், நஞ்சியல், உள மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளை காணமுடிகிறது. “உத்தர தந்த்ரா” என்ற இரண்டாம் பாகத்தில் தான் அறுவை சிகிச்சைக்கான முறைகளையும், அதற்கு பிறகு மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளன. மேலும் சுஷ்ருதா வழங்கிய “சுஷ்ருதா சம்ஹிதா” நூலில் சொத்த பல் நீக்கல், பெண்கள் மகப்பேறு சிகிச்சை, ஹிரண்யா சிகிச்சை, சிறுநீரக கல் அகற்றல், தசை பிடிப்பு குணப்படுத்தும் முறை, தசைசுரிப்பு முறை போன்ற எண்ணற்ற மருத்துவ சிகிச்சை முறைகளை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. அதேபோல் இந்நூலில் ஆறுவிதமான இடநழுவல் குறிப்புகளும், பணிரெண்டு வகையான எலும்பு முறிவுகள் பற்றியும், எலும்புகளின் வகைப்பாட்டினையும், நோயின் தாக்குதலால் எலும்பு பாதிக்கப்படும் நிலையையும், விழிப்புரை அகற்றும் சிகிச்சை முறை பற்றியும் சுஷ்ருதா கூறியிருக்கிறார்.

உடற்பருமன் அதிகளவில் இருப்பர்களுக்கு நீரிழுவு நோய், இருதய நோய் போன்ற நோய்கள் அதிகம் தாக்கும் என மிக சரியாக அன்றே சுஷ்ருதா கணித்தார். சுஷ்ருதா மதுவை சிறிதளவு கஞ்சாவுடன் சேர்த்து உணர்வற்றல் (Anaesthesia) நிலைக்கு ஒரு நோயாளியை கொண்டு சென்றார். எனவே உணர்வற்றல் நிலைக்கு கொண்டு செல்லும் மருத்துவப் பிரிவிற்கு சுஷ்ருதா முன்னோடியாக விளங்கினார். சுஷ்ருதா புரிய வேண்டிய கடினமான அறுவை சிகிச்சைகளுக்கு ஒரு நபரை உணர்வற்றல் நிலைக்கு கொண்டு சென்றாலே அவரால் அந்த சிகிச்சையை தாங்க முடியும் என நன்கறிந்திருந்த சுஷ்ருதா தானே அந்த நிலைக்கு செல்ல வழியையும் அமைத்தார். அறுவை சிகிச்சை முறைகளை நன்கறிந்த சுஷ்ருதா கடின நோய்களை கூட மிக லாவகமாக குணப்படுத்தினார். இவரது அறுவை சிகிச்சை முறையின் தன்மை விரைவில் உலகெங்கும் பரவியது. இதனால் சுஷ்ருதா உலகின் முதன் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராக கருதப்படுகிறார். இவரது முறைகளை அநேக அறுவை சிகிச்சைகளுக்கு இன்றும் பின்பற்றுகிறோம் என்று சொன்னால், சுஷ்ருதாவின் ஆற்றலை பாராட்டாமல் இருக்க வாய்ப்பில்லை.

சுஷ்ருதா தனது “சுஷ்ருதா சம்ஹிதா” நூலில் 300 வகையான அறுவை சிகிச்சைகளை விவரித்துள்ளார். மேலும் இந்த அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தகூடிய 125 அறுவை சிகிச்சை உபகரணங்கள் பற்றியும் விவரமாக கூறியுள்ளார். இவர் பயன்படுத்திய சில அறுவை சிகிச்சை உபகரணங்களை படத்தில் காணலாம்.

கிட்டத்தட்ட 2500 வருடங்களுக்கு முன் சுஷ்ருதா பயன்படுத்திய அநேக அறுவை சிகிச்சை உபகரணங்கள் இன்றும் அதே பெயர்களில் தற்போதைய மருத்துவர்களால் உலகெங்கும் பயன்படுவதை கண்டால் உண்மையில் சுஷ்ருதா எக்காலத்திலும் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்ற புகழாரத்திற்கு உகந்தவர் என தெரிகிறது.

சுஷ்ருதா பல வகையான அறுவை சிகிச்சை முறைகளுக்கு பிரபலமாய் கருதப்பட்டாலும் இன்று அவரை அதிகமாக நினைவு கூறும் அறுவை சிகிச்சை முறையை “ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை” என அழைக்கிறோம். இம்முறையை முதன் முதலில் உலகிற்கு சுஷ்ருதாவே அறிமுகப்படுத்தினார். சுஷ்ருதா புரிந்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை முறை இன்று “RhinoPlasty” என அழைக்கப்படுகிறது. “RhinoPlasty” அறுவை சிகிச்சை முறையில் ஒருவர் இழந்த மூக்கை மீண்டும் பெறலாம். அக்காலத்தில் தவறு செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டதை நாம் வரலாறு மூலம் அறிவோம். அப்படிப்பட்ட கடும் தண்டனைகளில் ஒன்றாக கருதப்படுவது தான் தவறு செய்பவரின் மூக்கை அறுப்பதாகும். அக்காலத்தில் எந்த நபரின் மூக்கு ஒரு பாதிப்பும் அடையாமல் உள்ளபடியே இருக்குமோ அவர்களுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பு கிடைக்கும். எனவே ஒருவரின் மூக்கு அவரது நன்மதிப்பை குறிக்கும் கௌரவ சின்னமாக கருதப்பட்டது. எனவே தவறு செய்து மூக்கறுப்பட்டவர்களை காப்பாற்ற சுஷ்ருதா முன்வந்தார்.

ஒருவரின் அறுபட்ட மூக்கை சரி செய்ய அந்த மூக்கின் அளவு, உருவ அமைப்பு ஆகியவை கணக்கிட்டு அதே அளவிலும், உருவ அமைப்பிலுமான தோலை ஒருவரின் முன்னந்தலையில் (நெற்றியில்) வரைந்து, பின் அதனை அப்படியே கீறி எடுத்து அந்த அறுபட்ட மூக்கின் பகுதியை நிரப்பி தையல் போடும் மாபெரும் மருத்துவ முறையை சுஷ்ருதா கையாண்டார். அறுவை சிகிச்சை புரிந்த புதிய மூக்கின் பகுதி ஒன்றுசேர சிறிது காலம் பிடிக்கும். நெற்றியில் தோல் எடுத்த பகுதி இக்காயம் ஆறுவதற்கு முன் வளர்ந்து மீண்டும் ஒட்டிக்கொள்ளும். எனவே முன்னந்தலையில் எந்த நஷ்டமும் இல்லாமல் இழந்த மூக்கை ஒருவர் மீண்டும் பெறலாம். இந்த அற்புத சிகிச்சை முறையை கண்டறிந்த சுஷ்ருதா மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தினார். சுஷ்ருதாவின் இந்த வெற்றிகரமான சிகிச்சையால் அவரை “ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையின் தந்தை” (“Father of Plastic Surgery”) என அறிஞர்கள் போற்றுவர். இன்றளவும் சுஷ்ருதா குறிப்பிட்ட வழிமுறையிலேயே மருத்துவர்கள் அறுபட்ட மூக்கை சரி செய்கிறார்கள். உலகில் மற்ற குடியினர் வாழ்வின் சிறு சிறு தேவைகளுக்கு பாடுபட்டு கொண்டிருந்த காலத்தில் இந்தியாவில் சுஷ்ருதா ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை முறையிலும் மற்ற அறுவை சிகிச்சைகளிலும் பலரின் உயிரையும், மானத்தையும் அறிவியலின் உச்ச தன்மையில் காத்து கொண்டிருந்தார். இச்செய்தி இன்றளவும் மிகுந்த ஆச்சிரியத்தை உண்டாக்கும். சுஷ்ருதா புரிந்த அறுவை சிகிச்சையை முறையையும் ஒட்டுறுப்பு சிகிச்சை முறையையும் விளக்கும் படத்தை காண்க!

சுஷ்ருதா வழங்கிய மருத்துவ முறைகளை பிற்காலங்களில் பல்வேறு குடியினரும் கற்றறிந்து மருத்துவ சேவையில் அவர்களும் பங்காற்றினார்கள். சுஷ்ருதாவின் நூல் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அரேபிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டு உலக நாடுகளுக்கு சென்றது. உலகிற்கே அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை முறைகளை கற்று கொடுத்த சுஷ்ருதா உண்மையில் ஒரு மனிதன் தானா? இல்லை ஏதேனும் தேவ அவதாரமா? இல்லை வேற்று கிரகத்திலிருந்து பூமியின் மக்களை காக்க வந்த வேற்று கிரகவாசியா? என்று History Channel தொலைக்காட்சியின் பெருமைமிகு “The Ancient Aliens” தொடரில் சுஷ்ருதா பற்றி குறிப்பிடுகிறார்கள். இப்படி உலகே கண்டு வியந்து போற்றும் வல்லமை படைத்த மருத்துவ மாமேதையான சுஷ்ருதா இந்தியாவில் வாழ்ந்தார் என்பதே நமக்கு அளவில்லா பெருமையைத் தரும்.

வாக்பட்டா

சரக்கா மற்றும் சுஷ்ருதா விட்டுச்சென்ற ஆயுர்வேத குறிப்புகளை வாக்பட்டா தேர்ந்தெடுத்து தானும் சில ஆயுர்வேத குறிப்புகளை உருவாக்கி இரு முக்கிய படைப்புகளை ஆயுர்வேதத்தில் வழங்கினார். அவை “அஷ்ட ஹிருதயா” மற்றும் “அஷ்ட சம்க்ரஹா” என்பதாகும். அஷ்டம் என்பது எட்டை குறிக்கும் எண்ணாகும். ஆயுர்வேதத்தின் எட்டு அம்சத்தை குறிக்கவே இப்பெயர்களில் வாக்பட்டா அவரது நூல்களை உருவாக்கினார். சில அறிஞர்கள் இவர் பெளத்த மதத்தை சார்ந்தவர் என்றும் இவர் கி. மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டுக்குள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். .

அஷ்ட ஹிருதயா எனும் படைப்பில் 7120 எளிய செய்யுள்களை அமைத்து ஆயுர்வேதத்தின் பெருமையை, தன்மையை அருமையான கவிதை நயம் கொண்ட பாடல்கள் மூலம் சிறந்த கலைத்தன்மையுடன் வாக்பட்டா வழங்கியிருந்தார். இப்பாடல்கள் ஆயுர்வேதத்தின் சாரம்சத்தை தேன் சொட்டும் சுவையோடு வழங்குகின்றன. அஷ்ட ஹிருதயா என்ற நூலில் அமைந்த எட்டு பிரிவுகளில் உடலுறுப்பு மருத்துவம், சிகிச்சை மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தை மருத்துவம், நஞ்சியல் போன்ற முக்கிய மருத்துவ உட்பிரிவுகளை அடக்கிய செய்திகளை நுணுக்கமாக வாக்பட்டா வழங்கியிருக்கிறார்.

வாக்பட்டாவின் முக்கிய பங்கு “காயச்சிகிட்சா” எனும் மருத்துவ சிந்தனையை வழங்கியதாகும். மேலும் அவரது எட்டு பிரிவு நூல்களில் நீண்ட ஆயுள் வாழும் முறை, சுகாதார முறை, நோய் உருவாகும் காரணிகள், மருந்துகளின் தன்மையும் வகைப்பாடும், சுவை உணர்தல் பற்றிய முக்கிய மருத்துவ சிந்தனை, மகப்பேறு காலம் மற்றும் குழந்தை பிறக்கும் தருவாயில் பிரசவத்தின் நுணுக்கங்கள், பிணி நீக்கல் முறை போன்ற வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை மருத்துவ அம்சங்களை மிக அழகாக விளக்கியிருக்கிறார். மேலும் “பஞ்சகர்மா” எனும் எனும் ஐவகைப்பட்ட பிணி நீக்கல் முறையைக் கொண்டு வாந்தி, பேதி, காய்ச்சல், இனிமா தயாரித்தல், நஞ்சு எடுக்கும் மருந்து தயாரித்தல் போன்ற செய்திகளையும் கூறியுள்ளார். சுஷ்ருதாவின் அதீத மருத்துவ சிகிச்சை அறிவையும், சரக்காவின் திறமையான மருத்துவ சிந்தனையையும் ஒருசேர இணைத்து தனது இரு படைப்புகளை வாக்பட்டா உருவாக்கினார். எனவே இந்த இரு நூல்களும் இன்று ஆயுர்வேதத்தின் முதல்தர மூல நூல்களாக கருதப்படுகின்றன.

பிற்காலத்தில் கேரளாவில் தனது ஆராய்ச்சிக்கு மூலிகைகளை பெற வேண்டி, இவர் தெனிந்தியாவில் அமைந்த கேரள மாநிலத்தில் வந்ததாகவும், அங்கு இருந்த மக்களுக்கு இந்த ஆயுர்வேத ரகசியங்களை கற்று கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது. இதனாலேயே இன்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு கேரள மாநிலமே ஆதராமாய் விளங்குகிறது. மேலும் கேரளாவில் அஷ்ட வைத்தியர்களை உருவாக்கி ஆயுர்வேத மருத்துவத்தை காலம் காலமாக பேணிக்காக்க வாக்பட்டா வழிவகுத்தார். கேரளாவில் ஆர்ய வைத்தியர்களுக்கு மூட்டு வலி குணபடுத்தும் முறை பற்றியும் நரம்பியல் சார்ந்த நோய்களுக்கான வைத்திய முறையையும் கற்று கொடுத்ததாக கூறப்படுகிறது. வக்பட்டாவிடம் இருந்து கற்ற கேரள வைத்தியர்கள் அவர்களின் சந்ததியினருக்கு இந்த அறிவை பரப்பி காலம் காலமாக இன்று வரை ஆயுர்வேத குறிப்புகளை பேணிக்காத்து வருகின்றனர். எனவே வாக்பட்டாவை “ஆயுர்வேத மருத்துவத்தின் பாதுகாவலர்” என கருதலாம்.

இந்திய மருத்துவத்தில் மேற்குறிப்பிட்ட இந்த மூவரும் உலகே வியக்கும் அளவிற்கு நமது மருத்துவ அருமை பெருமைகளை கொண்டு சென்றார்கள். இன்றும் இம்மூவர் வழங்கிய மருத்துவ குறிப்புகளை ஏதோ ஒரு வழியில் நவீன மருத்துவர்கள் கடைப்பிடித்து கொண்டு தான் வருகிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட மூன்றாயிரம் வருடங்களுக்கு முன் எவருக்குமே தோன்றாத மருத்துவ சிந்தனை எப்படி இம்மூவருக்கு தோன்றியது? என்பது ஆய்வுக்குரிய கேள்வியாகவே அமைகிறது. ஆனால் இப்பண்பு மற்ற துறைகளில் சாதித்த இந்திய அறிவியல் மேதைகளுடன் ஒத்து போகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book