“பஞ்ச விம்சாதி பிராம்மணா” (இருபத்தைந்து அத்யாயங்களை கொண்ட அறிவுப் புத்தகம்) என்ற பண்டைய இந்திய நூலை கருதிக் கொள்வோம். அப்புத்தகத்தில் “The world of heaven is as far removed from this world as thousand GAU stacked one above the other” என்ற தொடர் காணப்படுகிறது. இந்த நூலை W. Caland என்ற நெதர்லாந்து நாட்டு அறிஞர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேற்கண்ட தொடருக்கு அவர் வழங்கிய மொழிபெயர்ப்பில் “The world of heaven is as far removed from this (earthly) world as a thousand cows standing one above the other” என அமைந்திருந்தது. இதற்கு “நம் பூமி வானுலகிலிருந்து ஆயிரம் பசுக்களை ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைத்தால் அமையும் தூரத்திற்கு சமமானது” என்ற பொருள் அமையும்.

தத்துவ சிந்தனையிலும், கலாச்சாரத்திலும் தழைத்தோங்கிய இந்திய அறிஞர்கள் எப்படி அர்த்தமே இல்லாத மேற்கண்ட தொடரை கூறியிருப்பார்கள்? நாம் சற்று சிந்தித்தால் உண்மை புலனாகும். மூல சமஸ்கிருத நூலில் அமைந்திருந்த ‘GAU’ என்ற வார்த்தைக்கு ‘புவி (பூமி)’ மற்றும் ‘பசு’ என இரு பொருள் கிடைக்கும். இந்த இரு பொருளில் நெதர்லாந்து அறிஞர் பசு என்ற சொல்லை தனது ஆங்கில மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியதாலேயே இந்த அர்த்தமில்லாத தொடர் ஏற்பட்டது. நாம் ‘பசு’ என்பதற்கு பதிலாக ‘புவி’ என்ற பொருளை கருதிக்கொண்டால் இப்புவிக்கும் வானுலகிற்கும் இடையே ஆயிரம் பூமியை அடுக்கிய தொலைவிற்கு சமமாக அமையும் என்ற பொருள்படும். இதை சற்று கூர்ந்து நோக்கினால் “இப்புவிக்கும், வானுலகம் என்கிற சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு கிட்டத்தட்ட ஆயிரம் பூமி விட்டத்தை கொண்ட தொலைவிற்கு சமமாகும்” என்ற அர்த்தம் தென்படும்.

இன்றைய கணிப்பின் படி பார்த்தால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு கிட்டத்தட்ட 11,765 மடங்கு பூமியின் விட்டத்திற்கு சமமாக அமைகிறது. எனவே மேற்கூறிய குறிப்பின் மதிப்பு உண்மையான மதிப்பிற்கு 11.765 சதவீதம் பிழையாக உள்ளது. நாம் பூமியின் விட்டத்திற்கு பதிலாக அதன் ஆரத்தை கருதிக் கொண்டால் மேற்கூறிய குறிப்பின் மதிப்பு உண்மையான மதிப்பிற்கு 5.88 சதவீதம் பிழையாக சதவீதமாக அமைகிறது. இந்த பிழை ஓரளவிற்கு ஒப்புக்கொள்ளத்தக்க அளவில் உள்ளது. ஒரு வேளை ‘Heaven’ என்ற வார்த்தைக்கு சூரியனுக்கு பதிலாக வேறு ஏதேனும் கோளை பண்டைய இந்தியர்கள் கூற முற்பட்டார்களா? என சரிவர தெரியவில்லை. உதாரணமாக பூமிக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொலைவு கிட்டத்தட்ட 3294 மடங்கு பூமியின் விட்டத்திற்கு சமமாக அமைகிறது.. மேற்கூறிய குறிப்பின் மதிப்பு இந்த உண்மை மதிப்பிலிருந்து 3.29 சதவீத அளவிலேயே பிழையாக அமைந்துள்ளது. எப்படி இருப்பினும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த வசதியும் இல்லாத காலத்தில் இந்த கருத்தை இந்திய அறிஞர்கள் வழங்கியிருப்பது இன்றும் வியப்பை அளிக்கிறது. மேலும் மேற்கண்ட குறிப்பின்படி பண்டைய இந்தியர்களுக்கு “பூமி உருண்டை உருவத்தில் அமைந்த பந்து போன்ற கோள வடிவில் அமைந்துள்ளது” என்ற மாபெரும் சிந்தனை தோன்றியிருப்பதை உணரமுடிகிறது. இந்த சிந்தனை பல நூற்றாண்டுகளுக்கு பின்னரே மற்ற குடியினருக்கு புலப்பட்டது.

இந்தியர்கள் 108 என்ற எண்ணிற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கியதை நாம் காண முடிகிறது. உதாரணமாக அநேக இறை வழிபாட்டில் அமைந்த துதி பாடலுக்கு 108 செய்யுள்களை வைத்தே அமைத்துள்ளனர். அதேபோல் கடவுளுக்கு அர்ச்சனை புரியும் அஷ்டோத்திர நாமாவளிகளை 108 அளவிலேயே அமைத்தனர். மந்திரங்களின் அரசராக கருதப்படும் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சாடனம் புரிய விதி அமைத்தனர். வைணவர்களின் மூல திருத்தலங்களின் எண்ணிக்கை 108 திவ்ய பிரபந்தங்களாக விளங்குகின்றன. இவ்வாறு இந்தியர்கள் பெரும்பாலான அம்சங்களில் 108 என்ற எண்ணை அடிப்படை அளவாக கருதியே தங்களது முறைகளை அமைத்தனர். இன்றும் ஒரு உயிரை அவசர சிகிச்சை அளித்து காக்க வேண்டுமாயின் 108 என்ற எண்ணிற்கு தான் அழைத்து மருத்துவ ஊர்தியை (Ambulance) வரவைக்க முடிகிறது. ஆனால் ஏன் இந்தியர்கள் தம் வாழ்வாதார முறைகளில் இந்த குறிப்பிட்ட எண்ணிற்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும்? இதில் என்ன அறிவியல் சிந்தனை பொதிந்திருக்கிறது? இதற்கான விடையை ஓரளவிற்கு அறிய முயற்சிப்போம்.

கிட்டத்தட்ட 3800 ஆண்டுகளுக்கு முன் கி. மு. 1800 காலத்தில் “யக்ன வாக்யா” என்ற நூல் இயற்றப்பட்டது. அந்நூலில் “சந்திரன் மற்றும் சூரியனின் விட்டங்கள் பூமியிலிருந்து அதனதன் தொலைவிற்கு சரியாக 108 மடங்கு அமையும்” என்ற அர்த்தம் அமைந்த செய்யுளை காண முடிகிறது. ஆனால் இது சரியா? நாமே இக்கருத்தின் உண்மையை கண்டறிவோம்.

சந்திரனின் விட்டம் = 3474. 20 கிலோ மீட்டர்கள் பூமியிலிருந்து சந்திரனின் தொலைவு = 384405 கிலோ மீட்டர்கள் இதன் தகவு = 384405/3474.20 = 110.6456

எனவே இன்றைய கணக்கீட்டின் படி சந்திரனின் விட்டம் பூமியிலிருந்து அதன் தொலைவிற்கு கிட்டத்தட்ட 110 மடங்காக அமைகிறது. அதேபோல்

சூரியனின் விட்டம் = 1392684 கிலோ மீட்டர்கள் பூமியிலிருந்து சூரியனின் தொலைவு = 149597870.70 கிலோ மீட்டர்கள் இதன் தகவு = 149597870.70/1392684 = 107.4169522

எனவே இன்றைய கணக்கீட்டின் படி சூரியனின் விட்டம் பூமியிலிருந்து அதன் தொலைவிற்கு கிட்டத்தட்ட 107 மடங்காக அமைகிறது.

எனவே இன்றைய உண்மை மதிப்புகளுடன் செய்யுளின் கருத்தை ஒப்பிடுகையில் சந்திரனுக்கு சற்று அதிமாகவும், சூரியனுக்கு சற்று குறைவாகவும் அமைவதை காணலாம். ஆனால் கிட்டத்தட்ட ஆண்டுகளுக்கு முன் எந்த குடியினரும் சிந்திக்காத வானியல் உண்மையை இவ்வளவு நெருக்கமாக வழங்கிய இந்தியர்களின் அறிவுத்திறன் அபாரமானது என்று தான் கூறவேண்டும்.

இதேபோல் ஆரியபட்டா எழுதிய ஆரியபட்டீயா என்ற நூலில் நான்கு பாகங்கள் உள்ளன. அவற்றில் ஆரியபட்டா முதல் பாகத்தை தவிர மற்ற மூன்று பாகங்களின் செய்யுள்களின் கூட்டு தொகை 108 செய்யுள்கள் வருமாறு வேண்டுமென்றே அமைத்ததாக கருதப்படுகிறது. உண்மையில் 108 என்ற எண் இந்தியர்களின் வாழ்வில் அதிகளவில் ஏதோ ஒரு காரணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தியை நாம் இதன் மூலம் அறியலாம். மேலும் மதம், வாழ்வாதாரம் போன்ற செய்திகளுக்கு 108 என்ற எண்ணை கருதி அறிவியல் உண்மைகள் தோன்றுமாறு மறைத்து வழங்கிய இந்தியர்களின் ஆற்றலை கண்டு இன்றும் ஐரோப்பிய அறிஞர்கள் வியந்து போகிறார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book