இந்தியா தொன்றுதொட்டு உலோகவியல் (Metallurgy) சிந்தனையில் உலகிற்கு முன்னோடியாக விளங்கியது. அன்றைய இந்தியாவில் உலோகங்கள் ஏராளமாக கிடைத்ததை நன்கு பயன்படுத்திய இந்திய அறிவியல் சிந்தனையாளர்கள் பல அற்புத உலோகவியல் சார்ந்த செய்திகளை நமக்கு அளித்துள்ளனர். நமது தலைநகரமான புதுடில்லியில் அமைந்த இரும்புத் தூணும், கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் எனும் இடத்தில் கொடசாத்ரி எனும் மலையின் உச்சியில் அமைந்த இரும்புத் தூணும் இந்தியாவின் உலோகவியல் சிறப்பை பறைசாற்றும் சின்னங்களாக விளங்கி வருகின்றன. இத்தூண்களை கீழே வழங்கப்பட்டுள்ள படங்கள் மூலம் காணலாம்.

டில்லி இரும்புத் தூண் கொல்லூர் இரும்புத் தூண்

தில்லியில் அமைந்த இரும்புத் தூண் ஆயிரம் வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால் தில்லியின் மாசு, சுற்றுச்சூழல் மாற்றம் ஆகியவையில் இருந்து பிழைத்து இன்றும் சிறிதளவும் துருவே படியாமல் கம்பீரமாக புகழ் வாய்ந்த குதுப் மினார் அருகில் நிற்கிறது. அதேபோல் கொல்லூரில் அமைந்த இரும்புத் தூண் கிட்டத்தட்ட 2400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டாலும் இன்று வரை எந்த துரும்பும் அடையாமல் மலை மேலே நேர்த்தியாக அமைந்துள்ளது. கொல்லூர் இரும்புத் தூணை அன்றைய நாளில் அங்கிருந்த ஆதிவாசிகளே அவ்வூருக்கு செல்லவிருக்கும் ஆதி சங்கரரை வரவேற்பதற்காக அமைத்தனர். 2400 ஆண்டுகளுக்கு முன் ஆதிவாசிகள் அமைத்த இரும்புத் தூண் இன்றளவும் துரு அடையாமல் இருப்பதை காணும் பொழுது பண்டைய இந்தியர்களின் தொழில்நுட்பத் திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. இதிலிருந்து அன்றைய இந்தியர்கள் தங்களது கல்வித்தகுதியை கொண்டு மட்டுமே பெரிய சாதனைகளை படைக்காமல், அனைத்து மக்களும் தங்களது அறிவு கூர்மையால் பல நூற்றாண்டுகள் போற்றும் சின்னங்களை மிக சாதாரணமாக ஏற்படுத்தியத்தை காண முடிகிறது. இப்பன்பை இந்திய நாகரீகத்தின் பெரும் பாரம்பரியமாக இன்று உலக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

துத்தநாகம் (Zinc) அடங்கிய உலோகக்கருவிலிருந்து துத்தநாகத்தை தனியே பிரித்தெடுக்கும் முறையில் இந்தியர்களே உலகின் முன்னோடிகளாக கிட்டத்தட்ட நாலாயிரம் வருடங்களுக்கு மேல் விளங்கினர்.. துத்தநாகம் அடங்கிய உலோகக்கருவை வெப்பததிற்கு உட்த்படுத்தும் பொழுது 997 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அடைந்தவுடன் துத்தநாகம் நீர்ம நிலையில் தோன்றும். ஆனால் 1000 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அடைந்த நிலையில் உடனடியாக வாயுவாக துத்தநாகம் வெளியேறி விடுகிறது. எனவே மூன்று டிகிரி வெப்ப இடைவெளியில் நீர்ம நிலையில் இருந்த துத்தநாகம் வாயுவாக உருமாறி விடுவதால் துத்தநாகத்தை அதன் கருவிலிருந்து திண்ம நிலையில் வெளியெடுப்பது அறிஞர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. இந்த சவாலை நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இந்தியர்கள் மிகத் திறமையாக கையாண்டு துத்தநாகத்தை அதன் உலோகக்கருவிலிருந்து திண்ம நிலையில் திறமையாக பிரித்து எடுத்தனர். அன்றைய இந்தியர்கள் எவ்வாறு இந்த சவாலை முறியடித்தார்கள் என நாம் இங்கு காணலாம்.

ஒரு உலோகக்கருவிலிருந்து அந்த குறிப்பிட்ட உலோகத்தை பிரித்தெடுக்க பொதுவாக பயன்படுத்தும் முறையை நாம் ‘வடித்திறக்கல் செய்முறை’ (Distillation Process) என அழைப்போம். இம்முறையில் உலோகத்தை உடைய உலோகக்கருவை நன்றாக வெப்பப்படுத்தி அதனை காய்ச்சி, வடிகட்டி குளிர வைக்கும் பொழுது நமக்கு தேவைப்பட்ட உலோகம் கிடைத்துவிடும். இம்முறையை தான் பெரும்பாலும் இன்றும் வேதியியல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் துத்தநாகத்தை பொருத்த வரையில் அது நீர்ம நிலைக்கு வந்தவுடன் அதனை வடிகட்டும் முன்பே சட்டென வாயு நிலைக்கு (மூன்று டிகிரி வெப்ப இடைவெளியில்) மாறிவிடுவதால் துத்தநாகம் அடங்கிய உலோகக்கருவிலிருந்து துத்தநாகத்தை பிரித்தெடுப்பது சாதாரண வழியில் முடியாமல் போய்விடுகிறது. ஆனால் இந்தியர்கள் இந்த சிக்கலை தீர்க்க வித்யாசமாக சிந்தித்தனர்.

பொதுவாக தேவையான உலோகத்தை வடித்திறக்கல் செய்முறைப்படி பிரித்தெடுக்க உலோகக்களத்தின் கீழே வெப்பத்தை உருவாக்கி, அந்த வெப்பதினால் தோன்றும் உலோகக் கலவையை குளிர வைத்து தேவையான உலோகத்தை பிரித்தெடுப்பர். ஆனால் மூன்றே டிகிரியில் வாயு நிலைக்கு துத்தநாக கலவை செல்வதால் இம்முறையில் துத்தநாகத்தை குளிர வைத்து பிரித்தெடுக்க வாய்ப்பில்லை. இந்த பிரச்சனையை நன்கறிந்த இந்தியர்கள் அந்த உலோகக்களத்தை தலைக்கீழாக அமர்த்தி களத்தின் மேற்பகுதியில் வெப்பத்தை உருவாக்கி அதன் கீழ்ப் பகுதியில் பெரிய பனிக்கட்டியை வைத்தனர். களத்தின் மேற்பகுதியின் மூலம் பரவும் வெப்பம் உலோகக் கலவையை கீழ் நோக்கி தள்ளும். ஆனால் கீழே பனிக்கட்டி இருப்பதால் அப்பணிக்கட்டி துத்தநாகத்தை வாயு நிலைக்கு செல்லவிடாமல் நன்கு குளிர செய்து தின்ம நிலையில் படிய வைக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு இந்த படிவம் மூலம் துத்தநாகத்தை பெற்றுக் கொள்ளலாம். பண்டைய இந்தியாவில் துத்தநாகம் தயாரித்த இடத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்த உதைப்பூர் அருகே இன்று காணக் கிடைக்கிடைக்கிறது. அதை படத்தில் காணலாம்.

இந்தியாவின் இந்த திறமிக்க முறையின் மூலம் தயாரித்த துத்தநாகத்தை இந்தியா யாரிடமும் இந்த ரகசியத்தை கூறாததால் வெகு காலமாக இந்தியாவே உற்பத்தியில் முதன்மையான நாடாக திகழ்ந்தது. சில நூற்றாண்டுகளுக்கு பிறகு சீன அறிஞர் இந்தியாவிற்கு வருகையில் இந்த ரகசியத்தை நம்மிடமிருந்து கற்றார். அவரிடமிருந்து சில காலம் பிறகு ஆங்கிலேயர் வில்லியம் சாம்பியன் கற்றார். இதன் பின் 1543 ல் முதன் முதலில் இங்கிலாந்தில் துத்தநாகம் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கினார். இதுவே ஐரோப்பாவில் முதன் முதலில் துவங்கப்பட்ட துத்தநாக தொழிற்சாலையாகும். ஆனால் இந்தியா தான் துத்தநாகம் தயாரிப்பில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கியது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்தியர்களுக்கு அன்றிலிருந்தே தங்கத்தின் மீது அதிக மோகம் இருந்ததை நிரூபிக்கும் வகையில் கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்பே தங்க நகைகளை தயார் செய்யும் தொழிற்சாலைகளையும், அதனை விற்பனை புரியும் நகைக் கடைகளையும் அநேக இடங்களில் அந்நாளில் காணமுடிகிறது. அதேபோல் பித்தளை, ஈயம், செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்களையும் அதன் உலோகக் கலவையிலிருந்து பிரித்தெடுத்து பல்வேறு விதத்தில் அன்றைய இந்தியர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக வெண்கல சிலைகளை இந்தியா முழுக்க காணமுடிகிறது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட அக்கால மாளிகைகளில் தங்கம், வெள்ளி, ஈயம், செம்பு போன்ற உலோகங்களால் ஆன அலங்கார பொருட்கள் ஏராளமாக காணக் கிடைக்கிறது. இதிலிருந்து அக்கால இந்தியர்கள் உலோகவியல் துறையில் மிகச் சிறந்து விளங்கி உலகத்திற்கே வழிக்காட்டியாக திகழ்ந்தார்கள் என அறிகிறோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book